Wednesday 19 March 2014

கம்பன் 2014 உலகத் தமிழ்க் கருத்தரங்கின் விருந்தோம்பல் பற்றி சிங்கப்பூர் திருமிகு வரதராசன் அவர்களின் மதிப்புரை

காரைக்குடி கம்பன் விழா - விருந்தோம்பல்.
 
செட்டிக் குலத்தவர் செய்விருந் தோம்பலுக்(கு)
அட்டியெது(ம்) இல்லை அறிந்திடுவாய். - ஒட்டி
உறவாடு(ம்)  அன்னார்க்(கு) உளமார்ந்த நன்றி 
மறவாமல் சொல்வேன் மகிழ்ந்து. 
 
இலையே உரைக்கு(ம்) இதயத்தின் வீச்சை; 
மலையென்(று) உறைகின்றார் மாண்பில். - குலையா 
நகரத்தார் காட்டுகிற நல்விருந்  தோம்பலைப்
பகரத்தான் வேண்டும் பணிந்து.    
 
சிரித்த முகம்கொண்டு செட்டிநன் நாட்டார்
விரித்தயிலை யிட்டார் விருந்து.- கருத்தூன்றித் 
தன்னலம் போக்கிய  தாய்மார்க்கு நன்றிபல
முன்னம்யான் கூறல் முறை.
 
 
போலியான அன்பின்றிப் புன்னகைப்பார்; எந்தவோர் 
வேலியும் கட்டார் விருந்துக்குக். - கோலமுடன் 
காரைக்  குடிமக்கள்  காட்டுகிற நல்லன்பின்
சீரை உளம்வைத்துச் செப்பு. 
   
எப்பொழுதும் வந்தவர்பால் இன்முகத்தர் என்றாகி 
முப்பொழுதும் இட்டார் முழுவிருந்து. - அப்பழுக்(கு)
ஏதுமே இல்லாமல் இன்னுரை யார்மாட்டும்
கோதறச் சொல்வார் குளிர்ந்து. 
 
காசுபணம் பாரார்; களங்கமறு உள்ளத்தில் 
நேசமதை  மட்டும் நிறைக்கின்றார். - தேசுமிகு,
வள்ளிமுத் தையாவின் வற்றாக் கனிவன்பு
உள்ளிருக்கு(ம்) என்று(ம்) உறைந்து.     
 
பண்டத்தின் மேன்மை பகர்ந்திடும் பாவல்லான் 
அண்டத்தில் இல்லை அறைந்திடுவேன். - தண்டனிட்டுச் 
சென்னியவர் பாதத்தில் சீராய்ப் படிந்திருக்கப் 
பன்னினேன் நன்றியுரைப் பா. 
 

வரதராசன். அ.கி.  

No comments:

Post a Comment