காரைக்குடி கம்பன் கழகப் பணிகள்

காரைக்குடிக் கம்பன் கழகம்.........பணிகள்............  கம்பன் தமிழ் ஆய்வு மையம்
# கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்பிரல் 2, 3 ஆகிய நாட்களில் ரசிகமணி டி.கே.சி தலைமையில் கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் தம் வாழ்நாள் வேள்வியைத் தொடங்கினார் சா.கணேசன் எனும் காந்தியடிகளின் தொண்டர். அன்றிலிருந்தது தொடர்ந்து, காரைக்குடியிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன் சமாதிக் கோயில் வளாகத்தில் கம்பன் கவியரங்கேற்றிய பங்குனி அத்தத் திருநாளிலும், அதற்கு முந்திய மூன்று நாட்களான பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகிய நாட்களில் காரைக்குடியிலும் கம்பன் திருநாளைக் கொண்டாடினார்.
#கம்பன் பிறந்த நாளை நாம் அறிய சான்று ஏதும் கிடைக்காததால், அவன்  தன் இராவதாரக் காப்பியத்தை அரங்கேற்றியதாக தனிப் பாடல் ஒன்றின் துணையால் அறிய நேர்ந்த நாளையே ( கி பி 886, பெப்ருவரி 23 புதன்கிழமை)கம்பன் கவிச் சக்கரவர்த்தியாக இப்பூவுலகில் அவதரித்த நாளாகக் கொண்டு  கொண்டாடி வந்தார்.
# ஆண்டு தவறாது 44 ஆண்டுகள் தொடர்ந்து தம் வாழ்நாள் வரை (1982) கொண்டாடினார். 1983 முதல் அவர் விரும்பியவண்ணமே அவர்தம் தலைமாணாக்கரான கம்பன் அடிசூடியை செயலாளாராகக் கொண்டு அதே முறையில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக நடத்தி வந்து 2013ல் கம்பன் திருநாள் பவள விழா கொண்டாடப் பெற உள்ளது.
# உலகில் எங்கும், எம்மொழிக்கும் இல்லாததான மொழிக்கான கோயிலாக தமிழ்த் தாய் திருக்கோயிலை தமிழ்த் தாய், அகத்தியர், தொல்காப்பியர், கம்பன், திருவள்ளுவர், இளங்கோவடிகள், ஒலித்தாய், வரித்தாய் ஆகியோரின் சிலா வடிவங்களோடு அறுகோண அமைப்பிலான கல் திருப்பணித் திருக்கோயிலாக தமிழக அரசின் ஆதரவோடு கம்பன் மணிமண்டப வளாகத்தில் நிறுவினார். தமிழ்த் தாய், ஒலித்தாய், வரித்தாய் ஆகியோருக்கு முதன் முதலில், தம் வளர்ப்பு மைந்தரானசிற்ப குரு’, வாஸ்து விஞ்ஞானி வை. கணபதி ஸ்தபதியைக் கொண்டு வடிவமைத்த பெற்றியர்.
# 1968ல் நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலைக் கண்காட்சிக் குழுவிற்கு முதல்வர், பேரறிஞர் அண்ணாவின் வேண்டுதலால் தலைமையேற்று, கண்டோரெல்லாம் வியக்கும் வண்ணம் கலைக்காட்சியை நடத்தியதோடு, “கையேடுஎன்ற கருத்துக் கருவூலத்தையும் பதிப்பித்தார்கள்.பிள்ளையார்பட்டித் தல வரலாறு, இராஜராஜன், தமிழ்த் திருமணம், Some Iconographic Concepts, கட்டுரைக் களஞ்சியம்  ஆகியன அவர்தம்  பிற ஆய்வு நூல்கள்.
# நீண்ட நாட்களாக மூல பாடம் இல்லாதிருந்த குறையைப் போக்க,  சில தமிழ் அறிஞர்களின் துணையோடு கம்பராமாயணத்திற்கு சரியான மூல பாடம் ஒன்றினை எண்ணற்ற ஏட்டுச் சுவடிகள், பழம்பெரும் பதிப்புகளை ஆராய்ந்து முடிந்த அளவிற்கு பாட பேதமற்ற, கல்லாதாரும் எளிதில் புரிந்து படிக்கும் படியாக சந்தி பிரித்து பொருள் மாலையுடன், கூடின ஒரு பதிப்பினை தம் நண்பர் மர்ரே எஸ் ராஜம் உதவியுடன் ஆறு காண்டங்களையும் தனித் தனியாக பதிப்பித்தார்கள்.
# சாதி, மத, பதவி, அரசியல் சார்பு பேதமற்று தமிழகத்தின் தலை சிறந்த  அறிஞர்கள் எல்லோரும் பங்கேற்ற தமிழ் இலக்கிய விழா இஃதொன்றே.
# இளந்தலைமுறையினரை இனங்கண்டு நாளைய அறிஞர்களாக உருவாக்கும் வண்ணம், தமிழகம் முழுதுமுள்ள கல்லூரி மாணாக்கர்களுக்கான கம்பராமாயணம், திருக்குறளில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப் பெறுகின்றது; அடுத்த தலைமுறைப் பேச்சாளர்கள் உருவாகி வருகின்றார்கள்.
# ஆண்டு தோறும் இரண்டு கம்பராமாயணத்தில் புதிய கூறு ஒன்றைப் பற்றி அறக் கட்டளை ஆய்வுப் பொழிவுகள் நிகழ்த்தப் பெறுகின்றது; ஒன்று மூத்த அறிஞர்களைக் கொண்டும், மற்றொன்று இளந் தலைமுறைப் பேராசிரியர்களைக் கொண்டும். இதுவரை தாய் தன்னை அறியாத...., கம்பனின் மனவளம், கம்பனில் எண்ணமும் வண்ணமும், கம்பனில் நான்மறை, கம்பர் காட்டும் உறவும் நட்பும், கம்பர் போற்றிய கவிஞர், கம்பன் காக்கும் உலகு, கம்ப வானியல் என்பன நூல்களாக்கப் பெற்று அந்த அந்த  ஆண்டே வெளியிடப் பெற்றுள்ளன.
# மாதந்தோறும் முதற் சனிக் கிழமைகளில் தக்க அறிஞர் ஒருவரோடு, மாணாக்கர் / இளந்தலைமுறையினர் ஒருவரைக் கொண்டும் புதிய கோணங்களில் கம்பன் காவியம் பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்த பெற்று, அவை அச்சில் வர தொகுக்கப் பெற்று வருகின்றன.
# கம்பன் உள்ளிட தொல்காப்பியர் முதல் கண்ணதாசன் வரையிலான இலக்கிய வளங்களை கற்க ஓர் ஆய்வு மேற்கோள் நூலகம் ஏற்படுத்தி, அவற்றைக் கற்பிக்கவும் , ஆய்வு நிகழ்த்துவோருக்கான பணியிட வசதி செய்து , நெறிப் படுத்தி, செம்மொழித் தமிழ் ஆய்வுகளை ஊக்கப் படுத்தவும் முயற்சிகள் தொடங்கி நடை பெற்று வருகின்றன.
# இம்முயற்சியின் ஒரு கூறாகத்தான் இப்போது இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப் பெற்றுள்ளது; தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை  இத்தகு கருத்தரங்கமும், இடையிட்ட ஆண்டில் இலக்கியப் பயிலரங்கமும் நடத்தப் பெறும்.    

No comments:

Post a Comment