Sunday 20 October 2013

ராமாயணத்தைக் கற்றால் வெற்றி நிச்சயம்


ராமாயணத்தைக் கற்றால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம் என கம்பன் தமிழாய்வு மைய இயக்குநரும், காரைக்குடி கம்பன் கழகச் செயலருமான பழ.பழனியப்பன் கூறினார்.
  மதுரையில் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ்க் கல்லூரியும், கம்பன் தமிழ் ஆய்வு மையமும் இணைந்து சனிக்கிழமை நிகழ்த்திய கம்பராயண ஆய்வரங்கில், கம்பனில் புத்தம் புதிய (திறனாய்வு) கலைகள் எனும் கருத்தரங்கத் தொடக்க நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய நோக்கவுரை: பொதுவாக, பார்ப்பதே நமது மனதில் எளிதில் பதியும். ஆனால், கேட்பதை மனதில் பதிய வைப்பது அவசியம். பார்வையுடன் யோசிப்பது சேர்ந்தாலே கேட்பது எளிதில் மனதில் பதியும். இதுபோன்ற நிலையில் மாணவ, மாணவியர் செயல்பட்டால் தொல்காப்பியம் முதல் புதுக்கவிதை வரை எளிதில் மனதில் பதிய வைக்கலாம்.
 கம்பனை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனில், கம்பன் கழக ஆண்டுவிழாக்களால் மட்டும் நிறைவேறாது.
 திருஞானசம்பந்தர் போல ஊர் ஊராகச் சென்று கம்பனை இளந்தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பது அவசியமாகும். அதனடிப்படையிலேயே கல்லூரிகளில் கம்பன் ஆய்வரங்கத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
  ராமாயணத்தைக் கற்பதால் அதில் உள்ள இலக்கிய இன்பத்தை நுகர்கிறோமோ இல்லையோ, அதன் சாரத்தை நிச்சயம் நுகர்ந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. தாயிற்சிறந்த கோயிலுமில்லை என்பதை ராமன் மூலம் நமக்கு ராமாயணம் விளக்கியுள்ளது. ராமன் எந்த நிலையிலும் தந்தை சொல்லையும், தாயை வணங்குவதையும் கைவிடவில்லை. ஆகவே, இறுதியில் அவர் வெற்றி பெற்றார். அவரைப் போலவே இன்றும் தாய், தந்தையரை வணங்கும் மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்.
  ஆகவே, மாணவ, மாணவியர் கல்லூரிக்குப் புறப்படும்போது தாய், தந்தையரை வணங்க வேண்டும்.
  மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் தினமும் தாயை வணங்கிவிட்டே பணியைத் தொடங்குவர். ஆகவே, இளந்தலைமுறையினர் தாய், தந்தையைப் பேணுவது அவசியம். அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வங்கள் என்பதை வலியுறுத்துவது கம்பராமாயணம் என்றார்.
 நிகழ்ச்சிக்கு, செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் ரா. குருசாமி தலைமை வகித்தார். மதுரைத் தமிழ்ச் சங்கச் செயலர் ரா.அழகுமலை, தமிழ்ச் சங்கத் தலைவர் சு.வீரணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் மு.மீனா வரவேற்றார். உதவிப் பேராசிரியை அ.நந்தினி நன்றி கூறினார்.
  அமர்வுகள்:  கம்பனில் புத்தம் புதிய கலைகள் எனும் பொருளில் நடந்த அமர்வுக்கு கம்பன் தமிழ் ஆய்வு மைய இயக்குநர் பழ.பழனியப்பன் தலைமைவகித்து, இறையியல் நோக்கில் கம்பன் எனும் பொருளில் பேசினார். பேராசிரியை யாழ்.சு.சந்திரா செவ்வியல் நோக்கில் கம்பன் எனும் தலைப்பிலும், குறியீட்டியல் நோக்கில் எனும் பொருளில் சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் கல்லூரி உதவிப் பேராசிரியர் அ.பாண்டி ஆகியோரும் பேசினர்.
  மாலையில் நடந்த இரண்டாம் அமர்வில், கம்பனில் கல்வியியல் எனும் தலைப்பில் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி பேராசிரியர் சொ.சேதுபதி, மரபியல் எனும் பொருளில் திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் மு.முத்தையா, உயிரியல் எனும் பொருளில் செந்தமிழ்க் கல்லூரி உதவிப் பேராசிரியை கோ.சுப்புலட்சுமி, பறவையியல் எனும் பொருளில் திண்டுக்கல் எம்.வி.எம். கல்லூரி இணைப் பேராசிரியை க.நாகநந்தினி ஆகியோர் பேசினர்.
thanks to dinamani

No comments:

Post a Comment