Sunday 7 April 2013

நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன்

நீதி பரிபாலனம் செய்பவர்கள் ஆட்சியாளருக்கு அச்சப்படக் கூடாது

By காரைக்குடி,
First Published : 24 March 2013 04:05 AM IST
நீதி பரிபாலனம் செய்பவர்கள் ஆட்சியாளருக்கு அச்சப்படக் கூடாது என்ற கருத்தை கம்பன் வலியுறுத்திக் கூறியுள்ளார் என்றார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன்.
காரைக்குடி கம்பன் கழகத்தின் 75ஆம் ஆண்டு விழாவின் 3ஆம் நாள் நிகழ்வான சனிக்கிழமை, கம்பன் தமிழ் ஆய்வு மையத்தைத் தொடக்கிவைத்தும், "காலந்தோறும் கம்பன்' என்ற தலைப்பில் கம்ப ராமாயண உலகத் தமிழ் ஆய்வுக் கருத்தரங்கை தொடக்கிவைத்தும் அவர் பேசியது:
காரைக்குடியை கவிக்குடியாக மாற்றிய பெருமை கம்பன் அடிப்பொடி சா. கணேசனுக்கு உண்டு. கம்பரசம் பரப்பியவர். "கம்பனை கேலி செய்வதற்காகப் படிக்கத் தொடங்கினேன். ஆனால், கம்பன் என்னை கேலி செய்யத் தொடங்கினான்' என்று சொல்வார் கவியரசர் கண்ணதாசன்.
கம்பன் கழகத்தை பெரும் இயக்கமாகவே தோற்றுவித்தவர் சா.கணேசன். அவர் 1981ஆம் ஆண்டில் என்னை ஒரு மாணாக்கனாக இந்த மேடையில் பேச வைத்தார். இன்று கம்பன் ஆய்வு மையத்தை தொடக்கிவைக்கும் பெருமையை நான் பெற்றுள்ளேன்.
இந்த மேடையில் கம்பன் சொன்ன அறத்தைப் பற்றி பலர் பேசியிருக்கிறார்கள். பலர் எழுதியிருக்கிறார்கள். புதுச்சேரி கம்பன் கழகச் செயலர் முருகேசன், "கம்பன் ஒரு நீதியரசர்' என்ற நூலை எழுதியிருக்கிறார். ஆனால், நீதிமான்களைப் பற்றியும், நீதி நிர்வாகம் பற்றியும் கம்பன் ஏதாகிலும் சொல்லியிருக்கிறானா, ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் அந்தக் கோணத்தில் நான் கம்பனைப் பார்க்கிறேன். சட்டம் வேறு, நீதி வேறு.
அதனால்தான் அமைச்சகத்தில் சட்டம் மற்றும் நீதித் துறை என்று குறிப்பிடப்படுகிறது. சட்டத்துக்குள் நீதி அடங்கி விடாது. இதை கம்பன் கையாண்டிருக்கிற பாடல்களில் நான் பார்த்தேன். கம்பன் வாழ்ந்த காலத்தில், ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் சட்டத்தையும், நீதியையும் நிர்வகிக்க வேண்டிய கடமை மன்னருக்கும் இருந்திருக்கிறது, அமைச்சர்களுக்கும் இருந்திருக்கிறது என்பதைப் பல்வேறு பாடல்களிலே கோடிட்டுக் காட்டுகிறார். ஒரு மன்னனுக்கு 8 குணங்கள் இருக்க வேண்டும் என்பதையும் கம்பன் எடுத்துக் காட்டுகிறார்.
இனிய சொல் கூறல், தானம் செய்தல், ஆராய்தல், முயற்சி செய்தல், சீர்மை செய்தல், தீமை விலக்கல், வெற்றியளித்தல், நீதி நெறி படைத்தல் என மன்னனின் குணங்களாக அவர் கூறுகிறார்.
அதிலும் நீதி நெறி படைத்தலை அயோத்தியா காண்டத்தில், மந்தரை சூழ்ச்சி படலத்தில், கம்பன் தமது பாடல் வரியில் பரதன் தனது தந்தை மறைவை, நீதி நெறி இழந்து தவிக்கிறாயோ என்று கூறுவது போன்று அமைத்திருக்கிறார். இதிலிருந்து நீதி தவறாமை மன்னனுக்கு உண்டு என்பது தெரியவருகிறது.
எனவே, நீதியும், சட்டமும் மன்னனுக்கும் அமைச்சருக்கும் உண்டு என்பது கம்பனின் ஒரு பதிவு.
கம்பன் பாடல்களில் நீதிமான் குணங்களையும் கூறுகிறார். நீதி பரிபாலனம் செய்பவர்கள் ஆட்சியாளருக்கு அச்சப்படக் கூடாது என்கிற கருத்தையும் கூறியிருக்கிறான். நீதி தவறாது என்று சொல்லும்போது, தராசு முள்ளானது எடையில் தட்டு இழைக்கும் தவறைக்கூட ஏற்றுக்கொள்ளாது.
அளவிலே பெரிய பொருள்கள் விலை குறைவாக இருந்தும் பொருள் சுமார் என்கிற அளவு வந்தால் கூட, எந்தப் பிரச்னையும் வராது. ஆனால், அளவிலே சிறியதாகவும், விலையிலே அதிகமாகவும் உள்ள பொருளை, குறிப்பாக தங்கத்தை நிறுக்க வேண்டிய தராசு மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும். கம்பன் இதை உணர்ந்து கொண்டிருக்கிறான்.
அரசன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறபோது, தங்கத்தை நிறுக்கப் பயன்படும் தராசு போன்று இருக்க வேண்டும் என்கிறான். இப்படி நீதி பரிபாலனம் பற்றி கம்பன் எழுதியிருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என்றார் நீதிபதி இராமசுப்பிரமணியன்.

No comments:

Post a Comment