Friday 5 April 2013

கைகேயியின் பாத்திரத்துக்கு தனிச் சிறப்புண்டு


By 'காரைக்குடி,
First Published : 27 March 2013 01:15 AM IST
ராமாயணத்தில் கைகேயியின் பாத்திரத்துக்கு தனிச்  சிறப்புண்டு என்று பேராசிரியர் சொ.சேதுபதி தெரிவித்தார்.
 காரைக்குடியில் கம்பன் கழக 75-ஆம் ஆண்டு விழாவில்,  'ராமனின் பெருந்தகைமை பெரிதும் வெளிப்படுவது-கைகேயியிடத்திலே, வாலியிடத்திலே, ராவணனிடத்திலே' என்ற தலைப்பில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு இலங்கை ஜெயராஜ் நடுவராகப் பொறுப்பேற்றார்.
 கைகேயியிடத்திலே, வாலியிடத்திலே, ராவணனிடத்திலே என்று மூன்று அணியினர் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இதில் கைகேயியிடத்திலே... என்ற அணிக்குத் தலைமை வகித்துப் பேசிய சொ.சேதுபதி இவ்வாறு கூறினார்.
கைகேயியிடத்திலே... என்ற அணியின் தலைவர் பேராசிரியர் சொ. சேதுபதி: கைகேயியின் பாத்திரத்துக்கு தனிச் சிறப்புண்டு, எல்லாச் சிறப்பும் கொண்ட மகனது பெருமிதத்தை ஒரு குடத்துக்குள் இருக்கிற விளக்குப்போல அடக்கிவிடக் கூடாது என்பதும், அவனை உயர்த்தும்படியான ஊழ்வினையும் கைகேயியின் பெருந்தகைமையை வெளியே கொண்டு வருகிறது. வலியைத் தாங்கிக் கொள்கிறபோது உனக்கு வலிமை என்று, தன் நிலையிலிருந்து ராமனுக்கு கைகேயி உணர்த்துகிறாள்.
  ராமனைக் காட்டுக்கு அனுப்புவதில் பேரரசியான கைகேயிக்கு பின்னால் கூனி இருப்பது மட்டும் காரணமல்ல. தந்தைக்குப் பின்னர் தனயன்தான் நாட்டை ஆள வேண்டும் என்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று உலகத்துக்கு உணர்த்துவதற்கான செய்தியும் உள்ளது.
   இந்த உலகம் பயன்பெறுவதற்கு ராமனைக் காட்டுவதற்காக படைக்கப்பட்டவள் நான் என்று சொல்லிவிட்டு, தன் உள்ளத்திலே ராமன் மீது இருக்கிற அன்பைத் துறந்துதான் காட்டுக்கு அனுப்பத் தயார்படுத்துகிறாள். அதனை மறுக்காமல் மலர்ந்த தாமரை போன்ற முகத்துடன் ராமன் முன்வருவான் என்பதை கம்பன் காவியத்தில் காட்டியிருப்பது ராமனின் பெருந்தகைமை கையியிடத்திலேதான் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது என்றார்.
    அவருக்கு வலுச் சேர்க்கும் விதமாக இரண்டாவது சுற்றில், மகேஸ்வரி சற்குரு வைத்த வாதத்தில், ராமன் முடிசூட்டிக் கொள்வதைத் தடுத்து துன்பம் தரும் காட்டுக்கு அனுப்பிய அந்தத் தாயைக்கூட தெய்வம் என்று போற்றியவன் ராமன் என்றும்,
  மூன்றாவது சுற்றில் மெ. ஜெயங்கொண்டான் வைத்த வாதத்தில், இன்றைய சூழ்நிலையில் அம்மா கடைக்குப் போ என்று சொன்னால் போகாதா பிள்ளைகள் இருக்கிறார்களே.. ஆனால், ராமனோ தாய் காட்டுக்குப் போ என்று சொன்னதும் மலர்ந்த முகத்துடன் சென்றதுதான் அவனது பெருந்தகைமையைக் காட்டுகிறது எனவும் அணிக்கு வலுச் சேர்த்தனர்.
வாலியிடத்திலே..என்ற அணியின் தலைவர் மு. பழனியப்பன் முன்வைத்த வாதம், ராமனுக்கு உறவு கைகேயி, எதிரி ராவணன். ரெண்டும் கெட்டான் என்று முன்னர் பேசிய அணியின் தலைவரே சொல்லிவிட்டார். பெருந்தகைமை உறவிடமோ, எதிரியி டமோ எப்படி வரும். வாலியின் கதாபாத்திரம் மிக அழகானது. வாலி சண்டைக்கு அழைக்கப்படுகிறான் மனைவி தடுக்கிறாள். அரசே! ராமன் என்பவன் உயிர் கோடெ டுக்க வந்திருக்கிறான். அவன் மகா சக்கரவர்த்தி என்று எச்சரிக்கிறாள்.
  ஆனால், ராமனைக் காணாமலே வாலி அவன்மீது பக்தியும், அன்பும் கொண்டுவிட்டான். அரச பதவியைத் துறந்துவந்தவன் ராமன். இன்னொருவனின் அரச பதவியைக் கெடுக்க மாட்டான் என்று வாலி மனைவிக்குத் தெளிவுபடுத்துகிறான். போருக்குச் செல்வதற்கு முன்னரே ராமனை வாலி தெரிந்திருக்கிறான். அதனால் ராமனின் பெருந்தகைமை பெற்றிருக்கிறான் வாலி.
  தன்மீது அம்பு பாய்ந்ததும் வாலி ராமனிடத்திலே நான் உனக்கு எதிரியில்லையே என்மீது ஏன் அம்பு எய்தினாய் என்கிற கேள்விக்கு, அடுத்தவன் மனைவியைக் கவர்ந்துவிட்டாயே என்கிறான் ராமன். வாலியோ நான் விலங்கினம். எங்களுக்கு திருமணம் என்பதெல்லாம் ஏது என்று வாலி கூறியதைக் கேட்ட ராமன், நீ குரங்கினத்திலிருந்து அடுத்த நிலையான மனித நிலைக்கு உயந்திருக்கிறாய் நீ தெய்வ நிலைக்கு வர வேண்டும் என்றே ராமனின் பெருந்தகைமை வாலியை உயர்த்துகிறது என்று குறிப்பிட்டார்.
   அவருக்கு வலுச் சேர்க்கும் விதமாக 2-வது சுற்றில் இரா. ராமசாமி, வாலியின் மீது அம்பு பாய்ந்த அந்த நிலையிலும், ராமநாமம் சொல்லி அன்பு பாராட்டியது கண்டு ராமன் துடித்தானே, தவிக்கிறானே இது ஒன்று போதுமே ராமனின் பெருந்தகைமை வாலியிடத்தில் இருந்ததற்கு என்றும், 3-வது சுற்றில் சித்ரா சுப்பிரமணியன், ராமனைப் பற்றி வாலியின் மனதில் உயர்வான எண்ணம் இருக்கிறது. நாட்டைக் காப்பற்ற உயிரை பலி கொடுப்பது தவறல்ல என்று தன்மேல் ஏற்றுக்கொண்டு நிற்கிறான் வாலி. ராமன் அம்பு வாலி மீது பாய்கிறது. அந்த வாளைப் பிடித்துக் கொண்ட வாலி, ராம நாமத்தை தன் கண்களில் தெரியக் கண்டான். வாலியின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில், ராமன் வாலியை மனமாற்றம் செய்யவைத்து முக்தி தந்து உணர வைக்கின்றான். 
 ராவணனிடத்திலே.. என்ற அணியின் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன் முன்வைத்த வாதம், ராமனை வெல்வதற்கு இணையான வீரம் செறிந்தவன் யார் என்று கேட்டால் ராவணன்தான். தன் மனைவியை அடைய நினைத்த ராவணன் போர்க்களத்தில் ஆயு தங்கள் இழந்து நின்றபோது, உடனே அவனை அழித்துவிட நினைக்காத ராமன் இன்று போய் நாளை வா என்கிறானே... அப்போ ராமனின் பெருந்தகைமையை ராவணன் பெற்றதினால்தானே.
  2-வது சுற்றில் ராம.  மணிமேகலை... ராவணனைக் கொல்ல நினைக்காமல், சீதையை விடுவித்து விடு, உன் தம்பி வீடணனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடு என்று ராமன் கூறுகிறான். ஆனால், எதையும் ஏற்காமல் ராவணன் ராமனுடன் போர் புரிகிறான். போரில் அனைத்து ஆயுதங்களையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கின்றபோதும் அறிவுரையும், அறவுரையும் கூறுகின்ற இடம் போர்க்களமன்று என்று தெரிந்தும், ராவணனைப் பார்த்து, இன்று போய் நாளை வா என்று சொன்னதும், அவன்மீது இரக்கம் காட்டியதும்தான் ராமனின் பெருந்தகைமைக்குக் காரணம் என்றார்.
 3-வது சுற்றில் ந. சேஷாத்ரி ... தனிமனித ஒழுக்கத்திலிருந்து தவறிய ராவணனை போர்களத்திலே நிராயுதபாணி நிலையிலும், அவனை இன்றுபோய் நாளை வா என்று சொன்னதும் வீடணனிடம் ஆட்சியை ஒப்படைக்கச் சொன்னதும் ராவணனிடத்திலே ராமனின் பெருந்தகைமை வெளிப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment